ஈரோடு மாவட்டம் சீரங்கவீதியைச் சேர்ந்தவர் ராமு. இவர் ஜெகநாதபுரம் காலனியைச் சேர்ந்த கோகுலகண்ணன் என்பவரிடம் கடந்த ஆண்டு நான்கரை கோடி ரூபாய்க்கு காடா துணி கொள்முதல் செய்துள்ளார். 45 நாட்களில் திருப்பி தருவதாக உறுதியளித்த ராமு காலம் கடந்தும் பணத்தை வழங்கவில்லை.
இதையடுத்து, பணத்தை திருப்பி தருமாறு ராமு வீட்டிற்கு சென்று கோகுலகண்ணன் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோகுலகண்ணன் அளித்த புகாரில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், ராமு அவர் மகன் அருண்குமார், தங்கராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமுவின் மனைவி உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராமு திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாகக்கூறி மோசடி செய்த கும்பல் கைது