ஈரோடு: காரைக்காலை சேர்ந்தவர் ஜோதிபாசு. இவர் நேற்று (பிப்.11) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "நான் விமானபோக்குவரத்து பாதுகாப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளேன். விமான பாதுகாப்பு துறையில் கீழ் பணியாற்ற வெளிநாடு செல்ல முயற்சித்தேன். இதுதொடர்பாக, ஈரோட்டை சேர்ந்த இதயத்நிர்மல் ராஜ் என்பவர் எனக்கு அறிமுகமானார்.
அவர் கனிஸ்க் ஓவர்சீஸ் கன்சல்டன்சி டிராவல்ஸ் நிறுவனம் மூலம், ஐரோப்பிய நாடுகளில் பணியாற்ற வாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து நான், எனது நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 17 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை, இதயத் நிர்மல்ராஜின் வங்கிக் கணக்கு அனுப்பினோம்.
பின்னர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிநாட்டில் பணியாற்ற புறப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதனை நம்பி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை சென்றடைந்த எங்களிடம், மேலும் 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார். அந்த பணத்தை சென்னையில் நிர்மல் ராஜ், அவரது மனைவி அஸ்வினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விமானம் ஏற சென்றபோதே நிர்மல்ராஜ் அளித்த டிக்கெட், விசா ஆகியவை போலியானது என தெரியவந்தது. இதனையடுத்து வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தேன். மூன்று தவணைகளில் பணத்தை திருப்பித் தருவதாக அவரது மனைவி உறுதியளித்தார்.
இருப்பினும் இதுநாள் வரையிலும் பணத்தை திருப்பித் தரவில்லை. ஆகையால் பணத்தை மீட்டு ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக வெளிநாட்டு வேலை மோகத்தில் சிக்கும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றுவது அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சமையல் பாத்திரங்கள் பறிமுதல் - பறக்கும் படையுடன் அதிமுகவினர் வாக்குவாதம்