ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் கழுத்தில் புலிப்பல் டாலர் அணிந்திருப்பதாகக் கோவை வனத்துறை க்ரைம் கட்டுப்பாடு பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி குற்ற கட்டுப்பாடு பிரிவு அதிகாரிகள் சத்தியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னர் பகுதியில் இரண்டு பேர் பழைய பட்டு சேலை வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்த போது பரிசல் துறை, ரங்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (48). சென்னியப்பன் (42) என்பது தெரியவந்தது. மேலும் இருவரின் கழுத்தில் புலிப்பல்லுடன் கூடிய டாலர் அணிந்திருந்ததை கிரைம் கண்ட்ரோல் பிரிவினர் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகளிடம் இருவரையும் ஒப்படைத்தனர். இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் இருவரிடமும் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது தகவல் அறிந்த மாரியப்பன், சென்னியப்பன் ஆகியோரது உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகம் முன்பு இருவரையும் விடுவிக்கக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திடீரென வனத்துறை அலுவலக வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் நாங்கள் 50 வருடத்திற்கு மேல் புலிப்பல் அணிந்து கொண்டு தான் இருக்கிறோம் இப்பொழுது எதற்காக விசாரிக்கிறீர்கள், என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை' - நடிகர் விஷால்