ஈரோடு மாவட்டம், தாளவாடி வனப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரே சிவன்னா-குமாரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குமாரிக்கும் எதிர் வீட்டிலிருந்த தினேஷுக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குமாரி தினேஷுடன் தாளவாடி பகுதிக்குச் சென்று தனியாகக் குடித்தனம் நடத்தியுள்ளனர். இதற்கிடையே மூன்று மாதங்களுக்குப் பின் மனம் மாறிய குமாரி, சிவன்னாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு மீண்டும் திரும்பியுள்ளார்.
நேற்று முன் தினம் (அக்.31) கணவன் சிவன்னா வீட்டுக்கு வந்த குமாரி, அவருடன் இணைந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு தினேஷ் எதிர்ப்பு தெரிவித்து குமாரியிடம் சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குமாரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த குமாரியின் உறவினர்கள், தற்கொலைக்கு தினேஷ்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி அவரது வீட்டின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், தினேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தினேஷின் பெற்றோரைக் கைது செய்தனர். மேலும், தப்பிடியோடிய தினேஷை விரைவில் கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் எட்டு மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து குமாரியின் உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற பெண்கள் கைது!