ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள கந்தசாமிபாளையத்தில் சிந்தாமணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நியாயவிலைக் கடையொன்று செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக் கடையில் அப்பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இந்த நியாயவிலைக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வரும் நேரு நேற்று(அக்.02) தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிவகிரி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் கந்தசாமிபாளையத்தில் உள்ள நேருவின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் நேருவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எழுதிவிட்டு இறந்துள்ளார். அதில், “எனது தற்கொலைக்கு செயலாளர் ஆர்.கந்தசாமிதான் காரணம். கடையில் சர்க்கரை, டீ தூள், பருப்பு வாங்கினால் பணம் தராமல் இருக்கிறார். அவரது தொல்லை தாங்க முடியவில்லை. உறவினர் ஹோட்டல்களுக்கு அனுப்ப சொல்கிறார். எனக்கு மன உளைச்சல் அதிகம் ஆகிவிட்டது” என்று கையொப்பமிட்ட கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலைக் கடிதத்தின் பேரில் கந்தசாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுத்திடவும் முடிவு செய்துள்ளனர்.