கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினரான தனியரசு ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு மூலமாக இருந்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் உயர்ந்து நிற்க வித்திட்டவர் பெரியார். துக்ளக் விழாவில் மூத்த நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவு செய்து, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் படித்திடாத காரணத்தினாலும், மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அக்கறை இல்லாத காரணத்தினாலும் பெரியார் குறித்தும், திராவிட இயக்கங்கள் குறித்தும் ரஜினி குறை கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த அவதூறு கருத்துக்களுக்காக தமிழ்நாடு அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். எங்கிருந்தோ வந்து குடியேறிய, தமிழ் மண்ணில் பிழைப்பிற்காக வந்த நடிகர் தமிழ் சமூகத்தின் ஆசான் பெரியாரைப் பற்றி அவதூறு கருத்தைப் பதிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிலையை உடைப்பதன் மூலம் பெரியாரின் புகழையும் அவரது கருத்தையும் தடுத்து நிறுத்திட முடியாது. பூமியில் காற்று உள்ளவரை தமிழ் சமூகத்தில் பெரியாரின் புகழ் பட்டொளி வீசி பறக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. தமிழ் சமூகம் அரணாக இருந்து, பெரியார் புகழைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அடி தூள்... ரஜினிகாந்த் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?