ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சாவடிப்பாளையத்தில் அமைந்துள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தைக் கடந்தால் சாவடிப்பாளையமும், சாவடிப்பாளையத்திலிருந்து ஈரோட்டிற்கும், கொடுமுடிக்கும், கரூருக்கும் செல்வதற்கு இந்த ரயில்வே நுழைவுப் பாலம் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ள பாலமாக அமைந்துள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று வருவதால் இந்தப்பாலத்தில் ஆற்றுக் கசிவு நீர் அதிகளவில் தேங்கி பாலத்தை மிகவும் சிரமப்பட்டே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள பாலத்தை வாகன ஓட்டிகள் மட்டுமே வேகமாகக் கடக்க முடிவதாகவும், வாகன ஓட்டிகளும் சற்று அசந்தால் வாகனத்துடன் பாலத்தின் தண்ணீரில் விழுந்து விட வாய்ப்பிருப்பதாகவும், வாகனத்திற்குள் தண்ணீர் சென்று வாகனம் இயங்காமல் நின்று விடுவதால் வாகனத்துடன் சாலையைக் கடப்பது பெரும் பாடாக உள்ளது.
மேலும் நடந்து பாலத்தைக் கடக்கும் பெண்கள், முதியோர் மிகவும் சிரமப்பட்டே பாலத்தைக் கடக்க வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இந்த வழிப் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுப் போவதால் கொடுமுடி, ஈரோடு, கரூர் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு பிரதான சாலைகளைப் பிடிப்பதற்கு ஆறு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளதாகவும் தங்களது சிரமத்தைப் போக்கிட வேண்டும்.
மேலும், மருத்துவத் தேவை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு பிரதான சாலைகளைப் பிடிக்க முடியாத நிலையும் உள்ளதால் இவற்றைப் போக்கி அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் இந்த நுழைவுப் பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 15 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்