ஈரோடு: சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள ராஜாகாட்டில் வசித்து வருபவர், அங்குராஜ். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அங்குராஜ் கோவையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்து உள்ளார்.
இந்த நிலையில், பணி அழுத்தம் காரணமாக அடிக்கடி அங்குராஜ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், அங்குராஜ் மது அருந்தி இருந்தால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு வீட்டில் தனி அறையில் கதவை பூட்டிக் கொண்டு இருப்பார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அங்குராஜ் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு, வழக்கம் போல வீட்டில் தனி அறையில் இருந்து உள்ளார். இரண்டு நாட்களாக அங்குராஜ் அறையில் இருந்து வெளியே வராத நிலையில், வீட்டின் அறையில் துர்நாற்றம் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அங்குராஜின் மனைவி திலகவதி அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளார்.
அப்போது அங்குராஜ் அந்த அறையில் தற்கொலை செய்து இருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரோடு நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் அங்குராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், அங்குராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.