புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுபானக்கடைகளில் உள்ள பார் உரிய அனுமதி பெற்று நடைபெறுகிறதா என கண்காணிக்க ஈரோடு, திருப்பூர், ஊட்டியிலிருந்து டாஸ்மாக் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் புஞ்சைபுளியம்பட்டிக்குச் சென்றனர்.
இந்நிலையில் பவானிசாகர் சாலையில் பொன்னம்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பாரை ஆய்வுசெய்தபோது அங்கு செயல்பட்டு வந்த பார் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்ததை அறிந்த அலுவலர்கள் பாருக்கு சீல் வைக்க முயற்சித்தப்போது பார் நடத்தி வந்த நபர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அலுவலர்கள் புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வாரச் சந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஆய்வுக்கு சென்றபோது அங்கு சட்ட விரோதமாக பார் நடத்தும் நபர்கள் மீண்டும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நபர்களை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறு கடைகளையும் மாலை 5 மணியளவில் அடைத்தனர்.
இதனால் புளியம்பட்டியில் மது வாங்கச் சென்ற குடிமகன்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குச் சென்ற காவல் துறையினர் டாஸ்மாக் ஊழியர்களிடம் கடையை திறக்குமாறு கூறியதையடுத்து இரவு 8 மணியளவில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஆய்வுக்கு வந்த அலுவலர்கள் புறப்பட்டுச் சென்றனர். சட்டவிரோமாக பார் நடத்தியதோடு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் பவானிசாகர் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் என்பதால் புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.153.97 கோடி ஒதுக்கீடு!