ஈரோடு: புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் குவிந்ததால், சந்தை துவங்கிய 5 மணி நேரத்தில் 600க்கும் மேற்பட்ட கால்நடைகள் 1 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில், சராசரியாக மாடுகள் விலை 4,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் உள்ள கால்நடைச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.
குறிப்பாக கேரளா வியாபாரிகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வியாழக்கிழமையான இன்று (நவ.30) கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 110 கன்றுகள், 200 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அதேபோல், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்ததன் காரணமாக மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் தீவன பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து உள்ளது. இதனால் கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டியதால், சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
மேலும், கர்நாடகா மற்றும் கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். கடந்த வாரத்தை விட, இந்த வாரம் மாடுகளின் விலை 4,000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. அதிகாலை நேரத்தில் சந்தை துவங்கிய நிலையில், சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் சந்தை துவங்கிய 5 மணி நேரத்தில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மழை நீரில் மூழ்கிய ஆவடி காவல் நிலையம்.. ஜெனரேட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றும் காவலர்கள்!