தனியார் பள்ளி வாகனத்தில் சிக்கி ஆண் குழந்தை ஒன்று தாய் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்துள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி சேரன் வீதியைச் சேரந்த சியாமளா, தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் கவிநயா ஸ்ரீயை அழைத்துச் செல்வதற்காக தனது மற்றொரு குழந்தையான கவியானேஷுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பள்ளி வேனில் வந்த கவிநயா ஸ்ரீயை வேனிலிருந்து இறக்குவதற்குச் சென்ற சியாமளா, தன் பின்னால் வந்த தனது குழந்தை கவியானேஷை கவனிக்கவில்லை. சியாமளாவின் பின்புறமாக வந்த கவியானேஷ் சியாமளாவின் இடப்புறம் வந்து நின்றுகொண்டார். இதை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியபோது, எதிர்பாராத விதமாக கவியானேஷ் பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி சியாமளாவின் கண் முன்னே உயிரிழந்தார்.
தாயின் கண்முன்னே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறி்த்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், வேனின் ஓட்டுநர் எரங்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கிக் கொள்ளை: 500 சவரன் நகைகள், ரூ.18 லட்சம் திருட்டு