ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் பிரவுனி (எ) வெள்ளையன் என்ற நாய், அப்பகுதி தெருக்களில் வசித்து வந்தது. அங்குள்ள பகுதி மக்களும் இந்த பிரவுனி நாயை தங்கள் வீட்டு செல்லப்பிராணி போல் பழகி வளர்த்து வந்தனர். இதனால், அது தெருவில் புதிதாக யார் வந்தாலும் குரைத்து எச்சரிக்கை செய்யும்.
ஆனால், அப்பகுதி பொதுமக்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை ஏதும் செய்யாது. பிரவுனிக்கு அப்பகுதி மக்கள் பிஸ்கட், பால் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து அதனைப் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு பிரவுனி நாய் உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து தங்களுடன் செல்லப்பிராணியாக வாழ்ந்து வந்த நாயின் துக்கம் தாங்காமல், அப்பகுதி மக்கள் இணைந்து இறந்துபோன நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து, தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.
உயிரிழந்த நாய்க்கு ஊர்மக்கள் சேர்ந்து கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.