ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு பில்லூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் மேட்டுப்பாளையம் பவானிஆறு வழியாக வந்துசேரும். அதேபோல நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்யும் மழைநீர் மாயாற்று வழியாக பவானிசாகர் அணையில் கலக்கும்.
இந்த இரு ஆறுகளும் அணைக்கு முக்கிய நீர்வரத்தாக உள்ளது. இந்நிலையில், சில தினங்களாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தெங்குமரஹாடா படித்துறையில் உள்ள 11 படிகளை மூழ்கியபடி வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது.
கரையின் இருபுறமும் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளநீரால் பரிசல் இயக்கமுடியாமல் கரையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் மாயாற்று வழியைத் தவிர வேறு வழியில்லை.
தற்போது மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியிலிருந்து பேருந்தில் வந்த பயணிகள் வியாழக்கிழமை இரவு முதலே மாயாற்று கரையில் காத்திருக்கின்றனர்.
நேற்றிரவில் வனத் துறையின் (வாட்ச் டவர்) காட்சிக்கோபுரம் அறையில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருகிறது. மாயாற்றில் அதிக வேகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பரிசல் போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் மக்கள் கரையில் காத்திருக்கின்றனர்.