ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் பகுதியை ஒட்டியுள்ளது தெங்குமரஹாடா கிராமம். இங்குள்ள மக்கள் அங்கு ஓடும் மாயாற்றைக் கடந்துதான் பவானிசாகர் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பேருந்து மட்டுமே அங்கு சென்றுவரும் நிலையில், அந்தப் பேருந்து பழுதடைந்து காட்டிற்குள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அவலாஞ்சியில் பெய்யும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், தெங்குமரஹாடா மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதேபோல், பணிநிமித்தம் காரணமாக பவானிசாகர் போன்ற பகுதிகளுக்குச் சென்ற அவ்வூர் மக்கள் தங்களது குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும், அம்மக்கள் மழை காலத்தில் கூட மருத்துவச் சிகிச்சை பெற வெளியே செல்லமுடியாமல் தவிப்பதாகவும் வெள்ளம் வடியும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
"ஆண்டுதோறும் மாயாற்றில் வெள்ளம் ஏற்படும்போது நாள் கணக்கில் பாதிக்கப்படுகிறோம். வெள்ளம் ஏற்படும் காலத்தில் உயிரை பணயம் வைத்து மாயாற்றில் பயணிக்கிறோம். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தருமாறு அரசு அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாயாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் வந்தால் எங்கள் வாழ்க்கை சிறக்கும்" என்று தெங்குமரஹாடா மக்கள் தங்கள் இன்னல்களை பகிர்ந்துகொண்டனர்.