ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள கந்தசாமிபாளையத்தில் சிந்தாமணி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் நியாயவிலைக் கடையொன்று செயல்பட்டுவருகிறது.
இந்த நியாயவிலைக் கடையில் அப்பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடையில் ஊழியராகப் பணியாற்றிவந்த மாற்றுத்திறனாளி நேரு என்பவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அத்துடன் தனது சாவுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் செயலாளர் கந்தசாமிதான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்து உயிரிழந்தார்.
இதை அடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நியாயவிலைக் கடை ஊழியர் மரணத்துக்கு நீதி கிடைத்திட வேண்டும், கைப்பட கடிதம் எழுதிவைத்தும் இதுவரை சங்க செயலாளர் கந்தசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், ஊழியர் குடும்பத்துக்கான நிவாரண உதவித் தொகையை வழங்கிட வலியுறுத்தியும் நேருவின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது, செயலாளரின் நிர்பந்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட நேருவின் மரணத்துக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், புகார் வழங்கி 1 மாத காலமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், நியாய விலைக் கடையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கக் கூடாது, உணவகங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று வற்புறுத்தியவரைக் கைது செய்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லையென்றும், சங்கத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதால் அதனைக் கண்டறிந்து, சங்கத்தைத் தவறாக நடத்திவருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.