ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்களப் பாளையம் காட்டுத்தோட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவருக்கு நான்கு சகோதரர்கள். இவர்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் விவசாய நிலத்தை பாகம் பிரிப்பதில் சகோதரர்களுக்கிடையே கடந்த பல ஆண்டுகளாக தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் மூர்த்திக்கும், அவரது சகோதரர் மாரப்பனின் மகன் தினேஷிற்கும் கடந்த சில மாதங்களாக மனக்கசப்பு இருந்துவந்ததையடுத்து, சொத்து பிரிப்பதில் தனது தந்தை உள்ளிட்ட அனைவருக்கும் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி தினேஷ், மூர்த்தியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார்.
நேற்றிரவு மீண்டும் மூர்த்தியின் வீட்டிற்குச் சென்ற தினேஷ், குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீகச் சொத்தை சமமாக பிரித்து வழங்கக் கூறி தகராறில் ஈடுபட்டார். இது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.
இதில், மூர்த்தி தன்னிடமிருந்த கத்தியால் தினேஷை வெட்ட முயற்சித்தபோது தினேஷின் கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், மூர்த்தியை தள்ளிவிட அவர் அருகிலிருந்த மாட்டு வண்டியின் மேல் விழுந்தார். அப்போது அதிலிருந்த கூர்மையான ஆயுதம் குத்தியும், தலையில் பலமாக ஏற்பட்ட காயத்தாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்திற்குப் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் தினேஷை கைது செய்து பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே உயிரிழந்த மூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.