ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சலங்கப்பாலையம் ஊராட்சி செந்தாம்பாளையத்தில் நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் பொதுமக்களுக்காக பல சலுகைகள் காத்திருக்கிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் போல நான் அமைச்சராக உள்ளபோதே கூட்டுறவு சங்கங்களின் பிரச்னைகளை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பதவியில் இல்லாதபோது கூறினால் காரியத்தை செய்து முடிக்க முடியாது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஆனால், திமுகவினரோ கட்சியின் வேட்டியை கட்டவே பயப்படுகின்றனர். திமுகவினர் நமது முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர். திமுகவிலிருந்து பலர் அதிமுகவில் இணைய ஆவலாக உள்ளனர்.
கரோனாவை கட்டுப்படுத்துவற்காக தமிழ்நாடு அரசு நாள்தோறும் 5 முதல் 10 கோடி ரூபாய் வரை செலவிட்டுவருகிறது. இன்னும் 5 மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. தற்போதைய எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யும். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை தமிழ்நாட்டிற்கு அவர்தான் முதலமைச்சர் - அமைச்சர் கருப்பண்ணன்!