நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு அனைத்து தரப்பு தொழில் நிறுவனங்களும் படிப்படியாக தொடக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கல்வித் துறையை பொறுத்தவரை பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் ஒரு குழப்பமான சூழ்நிலையே நிலவி வருகிறது. பள்ளிகள் திறக்கப்படுவது, பாடத்திட்டம் குறைப்பு, தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது, புத்தகங்கள் வழங்கப்படுவது ஆகியவை குறித்து எண்ணற்ற கேள்விகள் மக்கள் மத்தியில் சுழன்று வருகின்றன.
இந்த நிலையில் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”ஈரோடு பள்ளிக் கல்வித்துறை அரசு பணியாளர்கள்/ தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அனைவரும் முதல்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்றி அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் குறித்து பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

முதன்மைக் கல்வி அலுவலரின் இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆசிரியர்களின் தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது எனவும் இது குறித்து ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க... கறுப்பு நிறம் அசிங்கம் எனப் பாடம் நடத்திய 2 ஆசிரியைகள் பணி இடைநீக்கம்!