ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டை கோஸ், பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடுகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறன.
தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களான தொட்டபுரம், தொட்டகாஜனூர், தலமலை, எரஹனள்ளி, திகினாரை, ஜீரஹள்ளி, கல்மண்டிபுரம், அருள்வாடி, கெட்டவாடி, தமிழ்புரம், நெய்தாளபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக முட்டை கோஸ் சாகுபடி செய்துள்ளனர்.
மூன்று மாத கால பயிரான முட்டைகோஸ் ஒரு ஏக்கருக்கு 15 டன் மகசூல் கிடைக்கிறது. உழவுக்கூலி, நடவுப்பணி, களையெடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.42 ஆயிரம் செலவாகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.10 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.
தற்போது முட்டைகோஸ் அதிகளவு விளைச்சல் காரணமாக ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.3க்கு விற்கப்படுகிறது. இதனால் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் உற்பத்தி செலவு கூட கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த ஊட்டி மலை காய்கறிகள்