ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதே நிறுவனத்தில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பா.நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்காட்டை சேர்ந்த மலைச்சாமி என்பவரும் வேலை செய்துவந்தார்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்துவந்ததால் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலர்களாக மாறினர். இவர்களுடைய காதல், வீட்டிற்கு தெரிந்ததும் இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துவைத்தனர். இத்தம்பதியினருக்கு வினிகா என்ற மகள் உள்ள நிலையில் இவர் தற்போது, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன் சண்முகப்பிரியா, தனது மகளை அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி, மனைவியை அடித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் கடந்த மூன்று நாள்களாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 8) சண்முகப்பிரியாவிற்கு பிறந்தநாள் என்பதால், அவரது தாயார் தனது வீட்டிற்கு மகளை அழைத்துள்ளார்.
பெற்றோர் வீட்டிற்கு மகளுடன் வந்த சண்முகப்பிரியா, தனது அக்கா பூரணியிடம் தனது மகளுக்கு கடையில் உணவு வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவர் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சண்முகப்பிரியா விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதைத்தொடர்ந்து சண்முகப்பிரியாவை சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'திருமணம் செய்வதற்காக இளம்பெண்ணைக் கடத்திய ஆட்டோ ஓட்டுநர்'