ஈரோடு-சத்தி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கனிராவுத்தர் குளம் உள்ளது. 44 ஏக்கரில் பரந்து விரிந்து காட்சியளித்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த குளம், படிப்படியாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டதால் வெறும் 14 ஏக்கராக சுருங்கியது.
இந்த குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என அப்பகுதியினர் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். இதனைக் கண்டித்து இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக நீரோடை அமைப்பினர் உட்பட தன்னார்வல அமைப்பினர்கள் ஊர்வலமாக வந்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்ட போராட்டக்காரர்களை அலுவலகம் அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுப்பதாகவும், குளத்தின் நீர்வழிப்பாதையிலேயே ஆக்கிரமிப்பாளர்களுக்காக அலுவலர்கள் சாலை அமைத்து தருவதாகவும் குற்றம்சாட்டினர்.
நீர்வளத்தை பெருக்கவும், நீராதாரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்காத அரசு, இதற்காக குரல் கொடுக்கும் சமூக அமைப்பினரை கைது செய்வதாகவும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கனிராவுத்தர் குளத்தை மீட்க போரட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.