ஈரோடு மாவட்டத்தின் மோப்ப நாய் படைப் பிரிவில் பயன்படுத்தப்பட்டுவந்த வைதேகி என்கின்ற பெண் நாய், உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, கயல், வைதேகி, பவானி, வீரா என நான்கு மோப்ப நாய்கள் இருந்து வந்தன. இதில் வைதேகியும் வீராவும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், பவானியும் கயலும் வெடி பொருட்கள் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டும் வந்தன.
இந்நிலையில், மோப்ப நாய் வைதேகி நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது. இதுகுறித்து ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூறாய்விற்காக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு வைதேகி எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு நடைபெற்ற உடற்கூறாய்வின் முடிவில் மாரடைப்பால் வைதேகி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்துபோன மோப்ப நாய் வைதேகியின் உடல் ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையில், மலர் வளையம் வைத்து மோப்ப நாய் வைதேகிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மரியாதை செய்யப்பட்டு, 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : ஊரடங்குக்குப் பின் 50% பயணிகளுடன் பேருந்து இயக்கம்!