ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அங்கு கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். கடந்த சில மாதங்களாக நடராஜ் என்பவருக்கு சொந்தமான லாரி ஒர்க் ஷாப்பில் ஜெகதீஸ்வரன் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி காலை ஒர்க் ஷாப் முன்புறத்தில் பிறப்புறுப்பு காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதில் ஒர்க் ஷாப் உரிமையாளர் நடராஜ், அதேப் பகுதியில் பஞ்சர் கடை வைத்திருந்த நவீன் இருவரும் தலைமறைவானதால் அவர்களை காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் இருவரும் அய்யன்சாலை பகுதியில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஜூலை 30ஆம் தேதி இரவு நடராஜ், நவீன், ஜெகதீஸ்வரன் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து நடராஜ், நவீன் இருவரும் சத்தியமங்கலம் சென்றுவிட்டு திரும்பினர்.

அப்போது ஜெகதீஸ்வரன் மதுபோதையில் ஒர்க் ஷாப்பில் காவலராக இருந்த சின்னையாவை அடித்ததாகவும், நடராஜ், நவீன் இருவரும் ஏன் அவரை அடிக்கிறாய் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜெகதீஸ்வரனை இருவரும் தாக்கியதில் பிறப்புறுப்புப் பகுதியில் பலத்த அடிபட்டதோடு ஒர்க் ஷாப்பிலிருந்த இரும்பு ராடில் மோதி மயங்கினார். இதனையடுத்து காலையில் ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததால் தலைமறைவானதாக தெரிவித்துள்ளனர்.
பின் இருவரையும் காவல் துறையினர் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.