ஈரோடு: மோளகவுண்டன்பாளையம் ஜீவானந்தம் வீதி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்றிரவு (ஆக.30) இப்பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாக்கடையில் சென்று பார்த்தபோது, பெட்ஷீட்டினால் சுற்றப்பட்டு, இறந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உடனடியாக இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நத்தினர். எங்கோ கொலை செய்து உடலை பெட்ஷீட்டினால் சுற்றி வீசி சென்றதை உறுதிப்படுத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் விசாரணை நடத்தினர்.
இதில், சாக்கடையில் இறந்துகிடந்தது 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பதும், தலையில் பலமாக தாக்கி கொலை செய்து சாக்கடையில் வீசிச்சென்றதும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து, இறந்தவரின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு... வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது