ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியின் வளர்ப்புத்தந்தை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த சிறுமி இவர்களிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள நண்பர் மூலமாக, உறவினர் வீட்டுக்குச் சென்று, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தாய் , அவரது இரண்டாவது கணவர்,மற்றுமொரு பெண், ஆவணங்களை தயாரித்து கொடுத்த நபர் ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்துக்கொடுத்தல் எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சிறுமியை பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து வந்து சுகாதார துறை அலுவலர்கள் கமலக்கண்ணன், விசுவநாதன் ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மற்றும் ஈரோடு மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மற்றும் காவல் துறையினர் கொண்ட குழுவினர் சிறுமியிடமும் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனையில் குழுவாகப் பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்திய குழுவினர் பிறகு சேலம் மற்றும் ஓசூருக்கு சென்றுள்ளனர். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவமனை மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சிறுமியிடம் கருமுட்டையைப் பெற்ற ஈரோடு சுதா கருத்தரிப்பு மையம் மருத்துவமனை சார்பில் மருத்துவர் பிரதீபா, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை மருத்துவர்கள் ஈத்ராஜ், ரீட்டா உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் 5 பேரிடம் ஈரோடு மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஷ்வரி தலைமையிலான அலுவலர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் சேகரிக்கும் ஆவணங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மீது காவல் துறைக்கு உள்ள சந்தேகம் உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'இனிமேல் யாரும் கருமுட்டை தானம் செய்யாதீங்க' - அனுபவத்தைப் பகிரும் பெண்!