ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பி.மேட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியின் தரத்தை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், ஊர்ப்பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில் நேற்று பள்ளிக்குத் தேவையான பீரோ, மேஜை, தண்ணீர் பீப்பாய்கள், எழுதுபொருள்கள், புத்தகங்கள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அடங்கிய கல்வி சீர்வரிசையை பள்ளிக்கு வழங்கினர். இதனைத் தொடர்ந்து, கல்வி சீர்வரிசையை ஆசிரியைகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஊர்ப்பொதுமக்களுடன் ஒன்றுசேர்ந்து சமத்துவப் பொங்கல் வைத்து வழிபாடு செய்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
இதையடுத்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருளும் வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியைத் தொடர்ந்து தனியார் பள்ளிக்கு இணையாக மாற்றுவதற்கான முடிந்த அனைத்து முயற்சிகளையும் ஊர்ப்பொதுமக்கள் மேற்கொள்ள இருப்பதாகவும் வரும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கபடும் எனவும் தெரிவித்தனர்.
இதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த அப்பகுதியிலுள்ள ஊர்ப்பொதுமக்கள் ஒன்றுகூடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
கண்பார்வையற்றவருக்கு 5 மணி நேரத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கிய கலெக்டர்!