ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் கடற்கரை ஓரப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வரும் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகப் பனைத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகத் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டமும் நடைமுறைப்படுத்த உள்ளது.
இந்நிலையில், பனை விதைகள் நடும் திட்டம் தொடர்பாக சத்தியமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நாடார் பேரவையின் மாநில தலைவரும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் வருகை புரிந்தார்.
இதையும் படிங்க: "உதயநிதிக்குக் கச்சத்தீவு ஸ்பெல்லிங் தெரியுமா.?" - சி.வி.சண்முகம் காட்டம்!
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் 15 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில், அவை அனைத்தும் வெட்டப்பட்டதால் தற்போது 5 கோடி மரங்கள் மட்டுமே உள்ளன. இதனை மீண்டும் 15 கோடி மரங்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடற்கரை ஓரமுள்ள 14 மாவட்டங்களில் ‘நாட்டு நலப்பணி திட்டத் தினமான’ வரும் 24ஆம் தேதி ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இதுவரை 50 லட்சம் பனை விதைகள் வரப்பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்திலிருந்து 5 லட்சம் பனை விதைகள் தருவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டு காலமாகப் பனைத் தொழிலாளர் நல வாரியம் செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பனைத் தொழிலாளர் நல வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைச் செப்டம்பர் 15 தமிழக முதல்வர் துவக்கி வைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: தி.நகர் சத்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு.. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவு... இருவேறு கருத்துகளால் குழப்பம்!