ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் தற்காலிக காய்கறி வியாபாரிகள் கடைகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 16) தொடங்கிவைத்தார். கோபி நகராட்சிக்கு சொந்தமான காய்கறிச் சந்தை மிகவும் பழுதடைந்துள்ளதால், புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, சில சட்ட சிக்கல்கள் காரணமாக அந்தப்பணிகள் தொடங்கவில்லை. ஆனால், விரைவில் அந்தச்சிக்கல் தீர்க்கப்பட்டு பணிகள் தொடங்கும், அதுவரை தற்காலிகமாக வியாபாரிகள் அம்மன் கோயில் திடலில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அது தொலைவில் உள்ளதாக வியாபாரிகள் கூறியதால், தற்போது பெரியார் திடலில் அந்தக் கடைகள் மாற்றப்பட்டுள்ளன.
வியாபாரிகளின் சிரமங்களைப் புரிந்துகொண்டு பெரியார் திடலுக்கு கடைகள் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் நீலகிரியிலிருந்து காய்கறிகள் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார். மேலும், அதிமுக அரசு யாரும் கேட்காமலே உதவி செய்யும் எனத் தெரிவித்தார்.
காய்கறிசந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவா அமைச்சரை வரவேற்று பேசுகையில், அமைச்சர் தனது சொந்த நிதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இங்கு தற்காலிக கடைகள் அமைத்துக்கொடுத்துள்ளார் என்றும் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரை அணுகி அனைத்து உதவிகளையும் பெறமுடியும் என்றார்.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்டு யானைகள்