இல்ல சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், அரசியல் பொதுக்கூட்டம், கருத்துக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் புகைப்படக் கலைஞர்களின் பங்கு முக்கியமானது. புகைப்படக் கலைஞர்கள் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை.
இது தவிர, வேலைக்கு விண்ணப்பித்தல், வங்கியில் கணக்கு தொடங்குதல், ஓட்டுநர் உரிமம் பெற, கடவுச்சீட்டுப் பெற, பள்ளி அடையாள அட்டை போன்ற அனைத்துப் பணிகளுக்கும் புகைப்படம் கட்டாயம். இதுபோன்ற பணிகளை நம்பி ஆயிரக்கணக்கான புகைப்படக் கலைஞர்கள் வாடகை கடைகளில் தொழில் செய்துவந்தனர்.
போட்டோ ஸ்டுடியோ எனப்படும் இந்தக் கடைகளில் வீடியோகிராஃபர், கணினி இயக்குநர், டிசைன் எனக் குறைந்தபட்சமாக நான்கு பேர் பணிபுரிவார்கள். போட்டோ பிரிண்ட் செய்யும் நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர். தற்போது செல்போனில் காணொலி, புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பம் வந்ததால் புகைப்படக் கலைஞர்கள் தொழில் நலிவடைந்துள்ளது.
இந்நிலையில், உலகை அச்சுறுத்திவரும் கரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் 21 நாள்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதன் காரணமாக போட்டோ ஸ்டுடியோக்களும் மூடப்பட்டன. தற்போது, 21 நாள் முதல் ஊரடங்கு நிறைவுபெற்று இரண்டாது ஊரடங்கு மேலும் 19 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகைப்படக் கலைஞர்கள் கூறுகையில், "ஈரோடு மாவட்டம் முழுவதும் போட்டோ ஸ்டுடியோவை நம்பி 500-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர். இது தவிர போட்டோ ஸ்டுடியோக்களை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.
கரோனா பாதிப்பால் சிறு தொழில்செய்யும் புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானமின்றி கடைகளுக்கு வாடகை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். போட்டோ ஸ்டுடியோக்களில் உள்ள பிரிண்டிங் இயந்திரம், கணினி ஆகியவைகளை தினசரி பராமரிப்பு செய்துவந்தால் மட்டுமே அது பின்னர் தொடர் பயன்பாட்டுக்கு உதவும்.
தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் அவை பழுதாகி மேலும் தொழில் நலிவடையும் நிலை ஏற்படும். எனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும். வரும் 20ஆம் தேதிமுதல் ஸ்டுடியோ திறந்து வாடிக்கையாளர்களுக்கு சேவைசெய்ய மத்திய அரசு அனுமதிளிக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு: விளைந்த சம்மங்கிப் பூவை அழிக்கும் அவலம்