ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த சில வாரங்களாக கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நோயாளிகளின் அவசர வசதிக்காக மருத்துவர்கள், செவிலியர், துணைச் செவிலியர் என 400க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த துணைச் செவிலியாகப் பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஒப்பந்த துணைச் செவிலி கூறுகையில், "15 ஆண்டுகளுக்கு முன் 33 ரூபாய் தினசரிக் கூலி என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்குச் சேர்ந்தோம். தற்போது, நாளொன்றுக்கு 490 ரூபாய் பெற்று வருகிறோம். 15 ஆண்டுகள் கழித்தும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாததால் நிரந்தரம் செய்யப்பட்ட செவிலிக்குக் கிடைத்திடும் எவ்வித வசதிகளும் தங்களுக்குக் கிடைத்திடவில்லை.
கரோனா வைரஸ் நோய் சிகிச்சைக்காக வீடுகளுக்குச் சென்று வர முடியாது என்று அவசரமும், முக்கியத்துவமும் கருதி மருத்துவமனை விடுதியில் தங்கி குடும்பத்தையும், குழந்தைகளையும் விட்டு விட்டு பணியாற்றி வருகிறோம். படிப்பை வைத்து செவிலியாக்காமல், தங்களது பணியை வைத்து செவிலியாக்கிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: கர்நாடக பசுமை மண்டலங்களில் கடைகள் திறக்க அனுமதி!