ஈரோடு: பெரியாரின் பேரனான இ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராகப் பதவி வகித்தார். மேலும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திருமகன் ஈவேராவுக்கு திருமணம் ஆகி பூர்ணிமா என்ற மனைவியும் சமனா என்ற மகளும் உள்ளனர்.
திருமகன் ஈவெராவின் மகளான சமனா குதிரை ஏற்ற போட்டியில் ஆசிய அளவில் வெற்றி பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்று திரும்பினார். கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட திருமகன் ஈவேராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திருமகன் ஈவெரா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக - பாரதிய ஜனதா - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான யுவராஜ்-யை விட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு நேரில் சென்று பொது மக்களின் கருத்துகளை கேட்டு உடனடியாக தீர்வு எடுத்து வந்தார். அது மட்டுமல்லாது தொகுதியில் உள்ள பிரச்னைகளை நேரடியாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்னைக்கு தீர்வு கண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பணிகளுக்காக சென்னை சென்ற திருமகன் ஈவெரா நேற்று அதிகாலை ஊர் திரும்பி, ஈரோடு திரும்பிகச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். காலை சுமார் 10 மணி அளவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் உடனடியாக உதவியாளர்கள் சுவாசக் கருவி பொருத்திய ஆம்புலன்ஸை வரவழைத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருமகன் ஈவேராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அவரது வயது 46.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. திருமகன் ஈவெராவின் இறப்புசெய்தி குறித்த தகவலை உடனடியாக அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சென்னையில் இருந்து கார் மூலமாக ஈரோடு விரைந்து வந்தார், இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
திருமகன் ஈவெராவின் மரணம் குறித்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் ட்விட்டர் மூலமாக தங்களது இரங்கல் செய்தியைத் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து கார் மூலமாக விரைந்து ஈரோடு வந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மகனின் உடலைப் பார்த்து கதறி கதறி அழுதார். காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் செல்போன் மூலம் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருமகன் ஈவெராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு, காந்தி, முத்துசாமி ஆகியோர் திருமகன் ஈவெராவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதலமைச்சரை கட்டிப்பிடித்து அழுத இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆறுதல் தெரிவித்தனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக திருமகன் ஈவெராவின் உடல் வீட்டில் வைக்கப்பட்டது.
அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன் மற்றும் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் திருமகன் ஈவெராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இன்று காலை தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், தமிழக செய்தி துறை அமைச்சர் முத்தூர் சாமிநாதன், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் துணைத் தலைவர், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசு ஆகியோர் திருமகன் ஈவேரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் , கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய தாரணி, பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், முத்தரசன், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப் பெருந்தகை, உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் காலை முதல் திருமகன் ஈவெராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மதியம் இரண்டு மணி அளவில் திருமகன் ஈவெராவின் உடலானது ஈரோடு காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி திருமகன் ஈவேராவின் உடலானது ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டு ஊர்வலமாக பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. சாலை, காவேரி சாலை, கருங்கல்பாளையம் வழியாக மின் மயானத்துக்கு கொண்டுவரப்பட்டது.
காங்கிரஸ் கட்சி உள்ளிட்டப் பல்வேறு கட்சியினரும் திருமகன் ஈவெராவின் உடலுக்கு முன்பாக அமைதியாக ஊர்வலமாக வந்தனர். திருமகன் ஈவெராவின் இறுதி ஊர்வலத்தில் அவரது தந்தையான இ.வி.கே.எஸ்.இளங்கோவன், மனைவி பூர்ணிமா, மகள் சமனா மற்றும் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருமகன் ஈவெராவின் உடலானது தகன மேடைக்கு கொண்டு சென்று எரியூட்டப்பட்டது. திருமகன் ஈவெராவின் இறப்பைத் தொடர்ந்து ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதே போல திருமகன் ஈவெராவின் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு மாற்று கட்சியினரும் பங்கேற்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
திருமகன் ஈவெராவின் முகத்தை கடைசியாக பார்த்த அவரது தந்தை இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கதறி கதறி அழுததைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பாரம்பரிய மிக்க காங்கிரஸ் கட்சியில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருமகன் ஈவெராவின் மரணம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.