ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதற்கு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.53 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக ஜோதிநகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி இன்று நடைபெற்று கொண்டிருந்தது. இந்த பணியை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோவை, ஈரோடு போல் வரும் காலங்களிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர் விநியோகப் பணி தனியார் வசம் சென்றுவிடும். தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவே எங்களுக்கு போதுமானது. அதனால் புதிய குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். விநியோகிக்கும் குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்பட உள்ளதால், கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் குடிநீர் விநியோகம், தனியார் வசம் ஒப்படைக்க மாட்டோம் என அரசு உறுதியளிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.