ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரத்தில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதானத் தொழிலாக உள்ளது. வனத்தில் இருந்து வரும் சிறுத்தை ஒன்று தினந்தோறும் ஆடு, மாடுகளை வேட்டையாடி தின்று பழகிப்போனது. மேலும் அது விவசாயப் பகுதியில் செயல்படாமல் இருக்கும் கல் குவாரியில் பதுங்கி விடுகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 13) தொட்டகாஜனூரைச் சேர்ந்த விவசாயி வெங்கட்ராமனின், தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டியிருந்த ஆட்டை கடித்துக்கொன்றது. இதற்கிடையே இன்று (ஜூன் 14) ரங்கசாமி என்பவரின் காவல்நாயை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. தொடரும் சிறுத்தையின் அட்டகாசத்தால் மக்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதுபோல சிறுத்தையால் கொல்லப்பட்ட கால்நடைகளுக்கு அதற்குரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த சிறுத்தையானது 25 ஆடு, 3 மாடு மற்றும் தோட்டத்து நாய்கள் 15 என வேட்டையாடி தினந்தோறும் அச்சுறுத்தி வருவதால், அதனைக் கண்காணித்து, கூண்டு வைத்து பிடித்தால் மட்டுமே விவசாயப் பணிகளைச் செய்ய முடியும் என தாளவாடி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 3 மணி நேர போராட்டம் - பட்டாசு சத்தத்தை பொருட்படுத்தாத யானைக் கூட்டம்