தெங்குமரஹாடா: நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் தீவு போன்று அமைந்துள்ளது ஒரு அழகிய கிராமம். தெங்குமரஹடா என்ற இந்த கிராமம் நீர் சூழ்ந்து இருந்தால் தான் தீவா, வனங்களால் சூழப்பட்ட நானும் அழகிய தீவுதான் என பச்சை ஆடை உடுத்து நிற்கிறது தெங்குமரஹடா.
சுற்றிலும் பசுமைக் காடுகள் இருப்பதால் முழுக்க முழுக்க வனத்துறையினர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது இந்த கிராமம். வற்றாத ஜீவநதியாக ஓடும் மாயாற்றைக் கடந்தால் தான் இந்த ஊருக்குச் செல்ல முடியும். வெளியூர்க்காரர்கள், சுற்றுலாவாசிகள் இந்த ஊருக்குச் செல்வதை வனத்துறை அனுமதிப்பதில்லை.
1952 ஆம் ஆண்டு இங்குள்ள வனப்பகுதி அழிக்கப்பட்டு 500 ஏக்கர் நிலம் தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இப்படி உருவான இந்த கிராமத்தில் தற்போது 497 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கூட்டுறவு பண்ணை சங்கத்தில் கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 127 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு இந்த 500 ஏக்கர் நிலத்தை பிரித்து விவசாயம் செய்ய ஒப்படைக்கப்பட்டது.
சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெங்குமரஹாடா கிராமத்திற்கு விவசாய கூலி வேலைக்காக சென்றனர். அங்கு அவர்கள் நிரந்தர குடிகளாக மாறினர். இந்த நிலையில் தெங்குமரஹாடாவை விலங்குகளின் வாழ்விடமாக மாற்ற தேசிய புலிகள் காப்பகம் நடவடிக்கை எடுத்தது.
இதன் காரணமாக தெங்குமரஹாடா கிராமத்தில் ஆதிவாசிகள் அல்லாத சுமார் 497 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இத்தனை காலம் வாழ்ந்து வரும் கிராமத்தையும், விவசயத்தையும் விட்டுவிட்டு வெளியேறச் சொன்னால் என்ன செய்வது என கேள்வி எழுப்பும் மக்கள், வனப்பகுதியாக மாற்றும் முன்னரே தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.
இது பற்றிய கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அறிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு உத்தரவு வழங்கியது. அதில் மக்களின் மறு குடியமர்வுக்கு இழப்பீடாக ரூபாய் 15 லட்சம் மற்றும் 2 செண்ட் நிலத்தை சமவெளி பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இவை நிகழ்ந்தால் 100 ஆண்டுகாலமாக செழிப்புடன் காணப்பட்ட தெங்குமரஹாடா கிராமமே காலியாக உள்ளது.
இதையும் படிங்க: இலங்கை சூழல் இந்தியாவுக்கு வருவதை தவிர்க்க முடியாது: மத்திய அரசை விளாசிய முத்தரசன்!