ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்கள் பண்ணாரியில் நிறுத்தப்பட்டு காலையில் அனுமதிக்கப்படுகின்றன.
போக்குவரத்து தடையால் மக்கள் அவதி
அதேபோல் மாநில எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு காலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதனால், மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் குறுக்கே நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், தாளாவடியில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் திம்பம் மலைப்பாதை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. அந்த ஆம்புலன்ஸ் இரண்டு மணி நேரத்துக்கு பின்னர்தான் பண்ணாரி வந்து சேர்ந்தது
தினந்தோறும் திம்பம் மலைப்பாதையில் வாகன நெரிசலால் நோயாளிகள், பள்ளி குழந்தைகள் சரியான நேரத்துக்கு செல்லமுடியாமல் தவித்தனர். அதேபோல பண்ணாரியில் இருந்து வடவள்ளி வரும் பள்ளி மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலால் காய்கறி லாரியில் பயணிக்கும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திம்பம் போக்குவரத்துத் தடையால் மக்கள் பாதிக்கப்படுவதாக முன்னாள் எம்எல்ஏ பி.எல். சுந்தரம் மற்றும் விவசாயி சங்க தலைவர் கண்ணையன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்கு நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.