ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு விடுமுறை காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அதுபோல கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இன்று பல்லாயிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணை அருவியில் குவிந்தனர். எப்பொழுது இல்லாத அளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்தாண்டு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பண்டிச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்து வருகின்றனர். இதனால் குளிப்பதற்கு இடம் இன்றியும் வாகனங்கள் நிறுத்த இடம் இன்றியும் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர்.
அருவியில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நின்று நீண்ட நேரம் குளிப்பதால் பின்னால் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மேலும், அருவிக்கு கீழ் புறத்தில் உள்ள பவானி ஆற்றில் செல்லும் தண்ணீரில் குழந்தைகளுடன் சுற்றுலாப் பயணிகள் விளையாடிமகிழ்ந்தனர். இதனால், மகாமகத்தில் குளிப்பது போல் கூட்டம் அலை மோதியது. குடத்தூர் பங்களாபுதூர் காவல் துறையினர் சார்பில் ஒலி பெருக்கி மூலம் சுற்றுலாப் பயணிகள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு அறிவுறுத்தியபடியே இருந்தனர்.
ஆனால், கூட்டம் அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினரும் பொதுப்பணித் துறையினரும் சிரமமடைந்தனர். மேலும், பூங்காவில் குழந்தைகள் விளையாடவும் உணவருந்த இடம் கிடைக்காமலும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டது.
பெண்கள் உடை மாற்றும் அறையும் இரண்டு மட்டுமே உள்ளதால் பெண்கள் ஈரத்துடனே வலம் வந்தனர். கொடிவேரி தடுப்பணை அருவிக்கு செல்லும் வழி முழுவதிலும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.