சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் வறட்சி நிலவிவரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், தாளவாடி, இக்கலூர், சிக்கள்ளி, மரூர் மகாராஜன்புரம் ஆகிய பகுதியில் சூறைகாற்றுடன் சுமார் 20 நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள பழமையான வாகை மரம் சாலையில் முறிந்து விழுந்தது.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். அதேபோல், காவல் நிலைய வளாகத்தில் உள்ள தேக்குமரம் முறிந்து விழுந்தது. தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஓடியது பொதுமக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக மின்தடை ஏற்பட்டது.