சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்தையொட்டி புளியம்கோம்பை கிராமம் அமைந்துள்ளது. குத்தியாலத்தூர், கடம்பூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பல புதிய அருவிகள் உருவாகி, காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்துள்ளன.
இந்த வெள்ள நீரானது புளியம்கோம்பை வழியாகச் சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும் குத்தியலத்தூர், கடம்பூர் வனப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவின் அளவு 2 டிஎம்சி எனக் கணக்கிடப்படுகிறது. இந்த 2 டிஎம்சி அளவிலான மழைநீரானது அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு எந்தவிதப் பயனும் இல்லாமல் பவானி ஆற்றில் கலக்கிறது.
ஏற்கெனவே, புளியம்கோம்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறது. இப்பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வனப்பகுதியில் பெய்யும் மழை நீரைத் தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும் ஏதுவாக கம்பத்ராயன் அணை கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு திட்ட அறிக்கைத் தயார் செய்யப்பட்டது.
அதன்பின்பு அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தப் பலனும் இல்லை. கம்பத்ராயன் அணைத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
மேலும், புளியம்கோம்பை பகுதியைச்சுற்றிலும் உள்ள 20ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் செழிப்பாகும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுத்து கம்பத்ராயன் அணையைக் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: 'அதிகாலை 4 மணி...சந்தேகத்திற்கிடமான கார்' - பின்தொடர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா!