ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்யும் மழைக்காரணமாக வனஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வனஓடைகளில் இருந்து ஆர்ப்பரித்து வரும் வெள்ளநீர் அருகியம்பள்ளம், சர்க்கரைப்பள்ளத்தில் கலந்து காட்டாற்று வெள்ளமாக கரைபுண்டு ஓடுகிறது.
இதனால் நேற்று முதல் கடம்பூர் - மாக்கம்பாளையம் இடையே வாகனப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த பள்ளத்தில்(ஆறு) நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் காய்கறி வாகனங்கள் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாக்கம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை எடுத்து வரமுடியாமல் விவசாயிகள் முடங்கியுள்ளனர்.
வாகனப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மாக்கம்பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் கிராம மக்கள் ஆபத்தை உணராமல் நீரில் கடந்து செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சர்க்கரை, அருகியம் பள்ளத்தில் இரு சக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு கடந்து செல்கின்றனர்.
இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், ’கடம்பூர் - மாக்கம்பாளையம் இடையே உள்ள 2 பள்ளங்களில் செந்நிறத்தில் வெள்ளம் ஓடுவதால் தண்ணீர் வடியும் வரை காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது’ என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தாளவாடியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை : 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு