ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம். சலவைத் தொழிலாளியான இவருக்கு கண்பார்வை தெரியாத விசுவநாதன் என்ற மகனும் மணிமேகலை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரகாசம், ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று(அக்.27) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ சிகிச்சைக்காக பிரகாசத்தின் குடும்பத்தினர் ஏற்கெனவே 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளனர். மேலும் 2.60 லட்சம் ரூபாயை கட்டிவிட்டு உடலை வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.
அரசின் உத்தரவை மீறி மருத்துவமனை நிர்வாகம் அதிக தொகை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரகாசத்தின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...கீழாநெல்லிக் கோட்டையில் வெடிகுண்டு வீச்சு: வீசியவர்களைக் காவல் துறையில் ஒப்படைத்த மக்கள்