ஈரோடு, நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு காவிரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாசூர் கதவணை பாலத்தின் சாலையை, இரண்டு மாவட்டத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த ஜூன், நவம்பர் மாதங்களில் பாலத்தையொட்டியிருந்த சாலையில் மண் சரிந்து விழுந்து சீரமைக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்திற்கான சாலையையும், பாலத்தையும் அச்சமின்றி கடப்பதற்கான சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, சாலையின் ஒருபுறத்தில் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு மறுபுறத்தில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நான்காவது முறையாக சீரமைப்புப் பணி நடைபெற்று வந்த சாலையின் மறுபுறமான இடது பக்கத்தில் மண்ணும், கற்களும் சரிந்து விழுந்தன.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு இரு மார்க்கமாக அமைந்துள்ள இந்த வழிப்பாதையில் அனைத்து ரக வாகனப் போக்குவரத்துக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மிக உறுதியான சாலை, பாலம் ஆகியவற்றை சீரமைத்திட வேண்டும்.
இந்தப் பாலத்தில் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், பாதுகாப்பான பாதையை பலமுடன் அமைத்திட வேண்டும் என்று அப்பகுதியினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்தப் பாலத்தையொட்டியுள்ள சாலையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் அப்பகுதியினரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: