ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காசியூர், அலிங்கியம், பூசாரியூர், கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நியாய விலைக்கடை திறப்பு, சாலைப்பணிகள், குடிநீர் மேல்நிலைத்தொட்டி உட்பட 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ”சீன அதிபர் - பிரதமர் மோடி மாமல்லபுர சந்திப்பின்போது, நமது அரசின் செயல்பாடுகளைப் பார்த்து வியந்துபோன இரண்டு தலைவர்களும் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு கடிதங்கள் எழுதும் அளவிற்கு நமது தமிழ் மண் சிறப்பாக விளங்குகிறது.
குடிமராமத்துப் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என நமது அரசு அறிவித்த திட்டத்தை இந்தியாவே வியந்து பார்த்தது. மேலும், நம்மைப் பார்த்து தற்போது அவர்களும் அத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். பட்டயக்கணக்காளர் பயிற்சியளிக்க 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தொழிற்கல்வியை கற்றுத்தரவும், அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. விடுமுறை நாட்களில் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் பள்ளி வகுப்பு முடித்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என்றார்.
தனியார் பள்ளிகள் போல் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தனியார் பள்ளிகளில் தனியாக கட்டணம் வசூலித்துக்கொண்டு நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுக்கின்றனர். நமது அரசை பொறுத்தவரை, தற்காப்பு கலை கற்றுத்தருவதற்கும், சாலை பாதுகாப்பு குறித்து கற்றுத்தரவும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தக் காலத்தில் பெற்றோர் கிணறில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தனர். அவையெல்லாம் இப்போது மறைந்து போயியுள்ளன. எனவே பெற்றோர் ஆர்வம் காட்டினால் அப்பணிகள் நிறைவேறும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கார்த்திகை மாதத்தால் கரி சோறு 'கட்' - ஆச்சர்யமளித்த அதிமுக!