ஈரோடு: வெள்ளோடு அடுத்த முகாசி அனுமன்பள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இந்திராணி என்பவர், மாணவ, மாணவிகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது, மேலும் சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் மாணவர்கள் துண்டு அணிந்து வரக்கூடாது, மாணவிகள் பூ மற்றும் பொட்டு ஆகியவை வைக்கக் கூடாது என தடை விதித்தாக கூறப்படுகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளி மேலாண்மை குழு உதவியுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வெள்ளோடு காவல்நிலையத்திலும், மாவட்ட கல்லி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து புகார் அளித்த மாணவர்களைப் பெற்றோர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் என்பவர் மிரட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வெள்ளோடு காவல்நிலைய போலீசார், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் “ கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள் புதியதாகப் பொறுப்பேற்று தலைமை ஆசிரியர் இந்திராணி. பொறுப்பேற்ற நாள் முதல் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
மாணவிகள் பூ, பொட்டு வைக்கக் கூடாது, மாணவர்கள் கையில் கயிறு ஏதும் அணியக் கூடாது, சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் மாணவர்கள் துண்டு அணிந்து வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது குறித்து பலமுறை தலைமை ஆசிரியருடன் நாங்கள் முறையிட்ட போதும் உரியப் பதில் அளிக்கவில்லை. கடந்த 6 வருடங்களில் இது போன்ற பிரச்சனை ஒரு போது வந்தது கிடையாது. இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாமீன்; விரிவான அறிக்கை அளிக்க சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு!