பண்ணாரி குண்டம் திருவிழா: எஸ்பி ஆய்வு - பண்ணாரி குண்டம் திருவிழா
ஈரோடு:பண்ணாரி குண்டம் திருவிழா அன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக தகர சீட் பந்தல், தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதனை மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வுசெய்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்தக் கோயிலுக்கு ஈரோடு கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா ரத்துசெய்யப்பட்டது.
இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவுசெய்யப்பட்டு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கான கால அட்டவணை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்து அனுமதி கேட்ட நிலையில் திருவிழா நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் குண்டம் திருவிழாவில் பொதுமக்கள் தீமிதிக்க அனுமதி இல்லை எனவும், பூசாரி மட்டுமே குண்டம் இறங்க அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் அம்மன் திருவீதி உலா ரத்துசெய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், குண்டம் திருவிழா நடைபெறும் தினத்தன்று கோயிலுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் மார்ச் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை குண்டம் திருவிழா நடைபெற உள்ளதால் அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் கோயிலின் முன்புறம் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க தகர சீட் பந்தல் அமைக்கப்பட்டு அதில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வுசெய்தார்.
இதையும் படிங்க: திமுகவினர் பரப்புரையின் போது கண்ணியமாக பேச வேண்டும் - ஸ்டாலின்