ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் திட்டமலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கோபிசெட்டிபாளையம், நம்பியூர் மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், பெருமாநல்லூர், செங்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரி முடிந்ததும் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 6 பேர் அந்த வழியாக சென்ற பொலீரோ ஜீப்பில் லிப்ட் கேட்டு கெட்டிசெவியூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீப்பானது தங்கமகாரடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாரல் மழையால் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: "சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்" - மாநகராட்சி ஆணையர்
இதில், ஜீப் ஓட்டுநரான ரங்கசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், லிப்ட் கேட்டு வந்த கல்லூரி மாணவர்கள் 6 பேரும் படுகாயங்களுடன் உயிர்த் தப்பினர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்து நடந்த இடத்தில் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வரப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஓட்டுநர் ரங்கசாமி(63) என்பவர் குன்னத்தூர் அருகே உள்ள நெட்டிச்சிபாளையத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தஞ்சையில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் உட்பட 2 பேர் கைது!