கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. என்றபோதிலும் சரக்கு ரயில் சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அந்த சரக்கு ரயில்களில் உரங்கள், நியாய விலைக் கடை அத்தியாவசிய பொருட்கள், வியாபார நிறுவனங்களுக்கான பொருட்கள், எண்ணெய் வகைகள், சிமெண்ட் மூட்டைகள் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஈரோட்டிலிருந்து சேலத்திற்குச் செல்லும் மகுடஞ்சாவடி, மாவேலிப்பாளையம் ரயில் நிலையங்களுக்கிடையேயான ஆலங்காடு புதுப்பாளையம் பகுதியில் ரயில்வே இருப்புப்பாதை தண்டவாளத்தில் சுமார் 6 அடி உயரமுள்ள கான்கிரீட் கல்லை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்திருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் அந்த கான்கிரீட் கல்லை அகற்றி அதை வைத்த நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இவ்வழக்கில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, நாகலிங்கம் ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் ரயிலைக் கவிழ்ப்பதற்காக இருப்புப்பாதை தண்டவாளத்தில் கல்லை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் திறப்பு