ஈரோட்டில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலை சரக்கு ரயிலொன்று கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சரக்கு ரயில் ஈரோடு அருகேயுள்ள தொட்டிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சரக்கு ரயில் ஓட்டுநர் ரஞ்சன்குமார், ரயில்வே இருப்புப்பாதையின் நடுவில் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெகு சாமர்த்தியமாக சரக்கு ரயிலை நிறுத்தினார்.
பின்னர், ரயில்வே இருப்புப்பாதையில் கற்கள் குவித்து வைத்திருப்பது குறித்து, உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டு, இருப்புப்பாதையில் வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றிய பிறகு, 30 நிமிடம் காலதாமதமாக கோயம்புத்தூருக்கு சரக்கு ரயில் சென்றது.
இதே மார்க்கத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் சரக்கு ரயிலை கவிழ்ப்பதற்கு தொட்டிபாளையத்தில், இருப்புப்பாதையின் நடுவே கான்கிரீட் கற்களை வைத்ததாக இரண்டு இளைஞர்களை ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக அதே தொட்டிபாளையம் இருப்புப்பாதை பகுதியில் கற்களை வைத்திருந்தது குறித்து ரயில்வே முதன்மைப் பொறியாளர் பாலயுகேஷ், ஈரோடு ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினருக்குப் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே காவல் துறையினர், இரண்டாவது முறையாக சரக்கு ரயிலைக் கவிழ்ப்பதற்கு இருப்புப்பாதையின் நடுவே கற்களை வைத்தவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.