ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் அடுத்த மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 62). இவரது மகள் ராணி திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வருகிறார். மணிமேகலையின் கணவரும், மகனும் இறந்த நிலையில் மணிமேகலை தனது தங்கையுடன் வசித்து வந்தார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு அவரது தங்கை எல்லப்பாளையத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனால், மணிமேகலை மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று (மே. 4) மாலை மகள் ராணி மணிமேகலையை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிந்த நிலையில் வீட்டினுள் டி.வி.யின் சத்தம் கேட்டுள்ளது. இதனால், ஜன்னல் வழியாக ராணி எட்டி பார்த்தபோது, மணிமேகலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
அதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த ராணி உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், மணிமேகலை அணிந்திருந்த 6½ சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் மணிமேகலை தனியாக இருப்பதை நோட்டமிட்ட கொலையாளிகள், மணிமேகலையை கொன்றுவிட்டு நகையை பறித்து சென்றனரா? கொலையில் உறவினர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர், மணிமேகலையின் உடலைக் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூராய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் லாரி விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு!