ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுக்கா விவசாயிகளுக்கான 'குறைதீர்க்கும் கூட்டம்' மாதந்தோறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுவந்தது. இம்மாதம் முதல் கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் தாளவாடி, நம்பியூர் ஆகிய தாலுக்காளுக்களில் உள்ள விவசாயிகளுக்கு கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் யாரும் வராத காரணத்தால், மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களிடம் மனுவை வாங்கிய கோட்டாட்சியர் அசோகன் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்து கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினார். இதில் விவசாயிகள் வரவில்லை என்பது ஒருபுறம் இருக்க வேளாண்மைத்துறை அலுவலர்களும், தாசில்தார் உட்பட முக்கிய அலுவலர்களும் வரவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.
இவ்வாறு கூட்டம் நடைபெறுவது குறித்து விவசாயிகள், விவசாய அமைப்புகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை என்பதால் தங்களுக்கு கூட்டம் நடைபெறுவது குறித்து தெரியாது என்று விவசாயிகள் தெரிவித்தனர். கோட்டாட்சியர் அசோகனிடம் கேட்டபோது, அனைவருக்கும் வருவாய்துறையின் மூலம் அறிவிப்பு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்வாறான அரசு அலுவலர்கள் உள்ளபோது விவசாயிகளின் குறைகள் மட்டுமல்ல பொதுமக்களின் குறைகள் கூட நிறைவேறாது என்று அங்கு வந்திருந்த பொதுமக்கள் புலம்பியபடி சென்றனர்.