ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி, தமிழ்நாடு - கர்நாடகா மாநில எல்லைப் பகுதியில் நக்சல் நடமாட்டம் இல்லை என்றும் அதனை தடுக்க பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டு தடுப்பு தனிப் பிரிவு போலீசார் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்து உள்ளார்.
சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம் நகராட்சி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி கோணமூலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சத்தியமங்கலம் கார்னரில் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பேசுகையில், "சத்தியமங்கலம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் போக்குவரத்து விபத்து மற்றும் நெரிசலை தடுத்து மாற்று வழி ஏற்பாடு செய்யவும் காவல் எல்லை பகுதியில் 250 சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதனால் குற்றங்கள் தடுக்கப்படும். கேமராவை பார்க்கும் குற்றம் செய்ய தயங்குவர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இது போன்று சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை விரிவுபடுத்த படும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் நக்சலைட் ஊடுருவல் இல்லை. இரு மாநில எல்லையான சத்தியமங்கலம் மலைப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இல்லை.
ஊடுருவலை தடுக்க பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வவ்போது பொதுமக்களிடம் இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்று பவானிசாகர் அடுத்த நந்திகிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை ஒட்டி கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் குற்ற தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலை கிராமங்களில் போலீசார் பொது மக்கள் நல்லுறவு முகாம் அமைத்து புதிய நபர் வருகை குறித்து கண்காணித்து வருகின்றனர்" என்றார். இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி ஐமன் ஜமால், சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் ஆர். ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் யூனியன் சேர்மன் கேசிபி இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!